“திவா! இந்தப் புஷ்பங்கள் இப்பொழுதுதான் அழகைப் பெற்றிருக்கின்றன.”
“மலரா அல்லது நானா?”
அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் தயங்கி, “நான் சிறிது விலகிப் போய்ப் பார்த்தேன் திவா! நீ எவ்வளவு அழகுடன் விளங்கினாய்! இன்னும் கொஞ்ச தூரம் சென்று நோக்கினேன். அப்பொழுதும் உன்னுடைய சோபை, உன்னுடைய காந்தி மிக மிகப் பிரகாசமாகவே தோன்றியது.”
“அதோ அந்த வால்கா நதிக்கரையிலிருந்து நோக்குவாயானால்?”
“முடியாது; அவ்வளவு தூரத்திலிருந்து முடியாது.” சூரனுடைய முகம் சடக்கென்று மாறிவிட்டது. அவன் விழிகளில் நீர் ததும்பிற்று.
“திவா! நான் தூரப் போகப் போக இந்தப் புஷ்பங்களைத்தான் காணமுடிகிறது. அதன் அழகை அனுபவிக்க முடியவில்லை.”
“அப்படியானால் தூரத்திலிருந்து என்னைப் பார்க்க விரும்புகிறாயா அல்லது பக்கத்திலேயே இருக்க விரும்புகிறாயா?”
“பக்கத்திலிருக்கத்தான் திவா! பகலோடு சேர்ந்தால் தானே சூரியன் பிரகாசிக்கிறான்.”
“நீ இன்று என்னோடு நாட்டியம் ஆடுவாயா?”
“நிச்சயமாக ஆடுவேன்.”
“இன்று நீ என்னோடு தங்குவாயா?”
“கட்டாயம் தங்குவேன்.”
“இரவு பூராவும்?”
“நிச்சயமாக.”
“அப்படியானால் நான் இன்று வேறு எந்த வாலிபர்களையும் அண்டவிடமாட்டேன்” என்று சொல்லியவாறே அவனைத் தழுவிக் கொண்டாள்.
வேட்டையாடிக் களைத்த அநேக யுவ-யுவதிகள் அங்கு வந்தனர்; அவர்கள் வரும் காலடிச் சத்தம் கேட்டும்கூட, இவர்களிருவரும் அப்படியே, ஆலிங்கனம் செய்த வண்ணமே நின்றனர்.
