தட்ச சீலத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மலைகளெல்லாம், பசுமையும் செழுமையும் கொண்டு காட்சி அளித்தன. ஒரு நாள் ஞானி அங்கிராவோடு வருண சௌவீரன், பால மத்ரன் முதலிய மாணவர்கள் பசுச் சாலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தனர். அந்தச் சாலைக்கு வெளியே இளங்கன்றுகள் துள்ளித் துள்ளி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன; மகரிஷியும்
மாணவர்களும் பசும்புற்றரையில் வந்து அமர்ந்தனர். அவருடைய இடது கையில் மெல்லிய ஆட்டு ரோமங்களின் பக்குவப்படுத்தப்பட்ட பட்டை இருந்தது. வலது கை பெரிய தக்களியைச் சுழற்றிக் கொண்டிருந்தது. சிஷ்யர்களில் சிலர் தக்களி சுழற்றிக் கொண்டும், சிலர் ரோமங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டும், சிலர் பக்குவம் செய்யப்பட்ட ரோமங்களைப் பட்டை போட்டுக் கொண்டும் இருந்தனர். கைகள் இயற்கையாக இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்க, தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஞானி அங்கிரா, ஆரியர்-ஆரியரல்லாதவருடைய புராதன நவீன பழக்க வழக்கங்கள், சிற்பம் முதலிய தொழில்கள் இவற்றில் எதை நாம் கைக்கொள்ள வேண்டும்; எவற்றைத் தள்ளிவிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார்.
“அன்புள்ள குழந்தைகளே! பழமை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவை என்றும் புதியனவெல்லாம் தள்ளிவிடக் கூடியவை என்றும் கூறுவது முற்றிலும் தவறு. மேலும் அப்படிச் செய்வது முடியாத காரியம். கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்துக் கொண்டிருந்த வட்சு நதிப் பிரதேச ஆரியர்கள் புதிதாக வந்த உலோக ஆயுதங்களைத் தாங்களும் உபயோகிக்க ஆரம்பித்தபோது எத்தனையோ பேர் இதை எதிர்த்தனர்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, ரிஷியினுடைய அன்புள்ள சிஷ்யர்களில் ஒருவனான வருணன்.
“கற்களினால் செய்யப்பட்ட ஆயுதங்களால் எப்படிக் காரியம் நடக்கும்?” என்று கேட்டான்.
“குழந்தாய்! இன்று தாமிர ஆயுதங்களினால் எல்லா வேலைகளையும் செய்கிறோம். நாளை இவைகளைவிடச் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் தோன்றக் கூடும். அப்பொழுது ஜனங்கள் இந்தத் தாமிர ஆயுதங்களைக் கொண்டு எப்படிக் காரியம் நடந்தது என்று கேட்பார்கள். எந்தக் காலத்தில் எந்த ஆயுதங்கள் உபயோகத்துக்கு வருகின்றனவோ, அவைகளைக் கொண்டு மனிதர்கள் காரியம் செய்து கொள்கிறார்கள். கல்லினால் செய்யப்பட்ட கோடரியைக் கொண்டு யுத்தம் செய்யும்போது, இரு தரப்பாரிடமும் அதே கோடரிதான் இருந்தது. உலோகங்களினால் செய்யப்பட்ட கோடரியைப் பிடித்துக்கொண்டு ஒரு தரப்பார் யுத்தத்திற்கு வரும்போது மற்ற தரப்பாரும் கல் கோடாரியைத் தூக்கி எறிந்துவிட்டுத் தாமிரக் கோடாரி தூக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
